
வங்கதேச நாட்டின் 23-வது அதிபராக, ஆளும் வங்கதேச தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான 78 வயது மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 20 அன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிற்பகல் 2 முதல் 5 மணி வரை நடைபெற்ற தேர்தலில், மொத்தம் பதிவான 343 வாக்குகளில் ஆலம்கீர் 255 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
உடல்நலக் குறைவால் முகமது ஷஹாபுதீன் அண்மையில் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த தேர்தலில், ஆலம்கீர் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவர் ஆகஸ்ட் 21 அன்று அதிபராகப் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.