
பிரான்ஸ் முழுவதும் தீவிரப் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சனிக்கிழமையன்று பாரிஸ் நகரில் சுமார் 1 லட்சம் மக்கள் திரண்டு பேரணியாக சென்றனர். போராட்டங்களைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்துக் கூட்டத்தைக் கலைத்தனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் என 70,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாரிஸில் உள்ள முக்கிய அருங்காட்சியகங்கள், கலாச்சார மையங்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டுள்ளன.
பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் மோசமான உள்கட்டமைப்பு வசதிகளை எதிர்த்து கடந்த மாதம் உயர்நிலைப்பள்ளி மாணவர்களால் இந்தப் போராட்டங்கள் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது தேசிய அளவிலான போராட்டமாக உருவெடுத்துள்ளது.